வடக்கு கிழக்கு தமிழருக்கான அரசியல் தீர்வு , அதிகார பரவலாக்கம் குறித்து தமிழ்த் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாகாணசபைக்கு குறிப்பிட்டளவு அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் மேலும் சில அதிகாரங்களைக் கோருகின்றனர்.
இவ்வாறான நிலையில், வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐரோப்பாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இத தொடர்பில் வேறுபட்ட தரப்பினருடன் விவாதங்கள் நடந்து வருகின்றன. கடன் மறுசீரமைப்பு திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும், வார இறுதியில் அவர்கள் அதை இறுதி செய்வார்கள். அதன் பின்னர் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் பொது நிதிக் குழுவிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படும். அதன்பிறகு, கடனாளிகளுடன் எஞ்சிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிப்பதற்கும், செலுத்த வேண்டிய தொகையை ஏதேனும் ஒரு வகையில் குறைப்பதற்கும் இலங்கை பரிசீலித்து வருகின்றது எனவும் கூறியுள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜெனிவா கூட்டத் தொடரிலும் இவ் ஆணைக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தெளிவுபடுத்தியுள்ளது.
சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் அந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்எனவும், ஓகஸ்ட் மாதம் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வு குறித்தும் அதிகார பரவலாக்கம் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அந்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகார பரவலாக்கம் குறித்தும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.