ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தே பெரும் பகுதியை அதாவது, அண்ணளவாக 93 சதவீதத்தை எடுத்துக் கடனை மறுசீரமைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.
வங்கிகளின் கடன்களிலிருந்து மறுசீரமைக்க முற்பட்டால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே மத்திய வங்கி ஆளுநர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படப் போகின்றது என்பது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான ஊழியர் சேமலாப நிதியத்திலேயே பிரதானமாக இலங்கை அரசு கைவைத்துள்ளது எனவும் உள்நாட்டுக் கடனின் 93 சதவீதத்தை அதிலிருந்தே மறுசீரமைக்கவுள்ளதாகவும் நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வங்கிகளின் கடனிலிருந்து மறுசீரமைப்பது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தே மறுசீரமைப்பை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
மேலும், கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள், ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கப் போவதில்லை என்று முன்னர் அரசு வழங்கிய உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டதுடன், வேறு வகையில் இதனை முன்னெடுக்க முடியுமா? என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வேறு தெரிவுகள் இல்லாமையாலேயே ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்க வேண்டி ஏற்பட்டதாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைத்தால் தனியார் துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என எம்.ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே தாம் எதிர்த்துத்தான் வாக்களிப்போம் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.