வெடுக்குநாறி மலை ஆலய வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப்பகுதிக்குள் ஆலய நிர்வாகம் உள்ளிட்ட எவருமே செல்லக்கூடாது என உத்தரவிடக்கோரி பௌத்த தேரர்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற இவ்வழக்கில் ஆலய பூசகர் மற்றும் ஆலய நிர்வாக செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

வெடுக்குநாறி ஆலயப்பகுதி ஒரு தொல்லியல் சின்னமாக காணப்படும் போதிலும் அதனைப் பேணிப் பாதுகாக்க தொல்லியல் திணைக்களம் தவறியதனால் ஆலயம் என்னும் பெயரில் அப்பகுதிக்குச் சென்று இடையூறு ஏற்படுத்துகின்றனர். எனவே அப்பகுதிக்கு எவரும் செல்லக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொல்லியல் திணைக்களம் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த ஓர் அரச சட்டத்தரணியும் ஆலய பூசகர் சார்பிலே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் நீதிமன்றில் வாதிட்டனர்.

இந்த வழக்கு தொடுநர் தரப்பு வேண்டுமென்றே பல விடயங்களை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், குறிப்பாக அப்பகுதியை பாதுகாக்க தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே ஆலய நிர்வாகம் அப்பகுதிக்குள் செல்லவதாக குறிப்பிட்டார்.

மேலும் ஆலய நிர்வாகம் மீது தொல்லியல் திணைக்களம் சார்பிலே வவுனியா நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற அறிவுறுத்தல்களின் பிரகாரம் ஆலயத்த்தில் பூசைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, இவற்றை அறிக்கையிட நீண்ட கால சந்தர்ப்பம் வழங்குதோடு ஆலய நிர்வாகத்திற்கோ அல்லது பூசகருக்கோ தடை விதிக்கக்கூடாது எனவும் கோரினார்.

இவற்றினை ஏற்ற நீதிமன்றம் எதிராளிகள் தரப்பு அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கி ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply