மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனம் சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளை அச்சிடும் இயந்திரங்களை பெற்று, பத்திரமொன்றுக்கு 150 ரூபா அறவிடும் நடைமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கான புதிய அச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 20 கோடி ரூபா செலவிடவேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு போதியளவிலான இயந்திரங்கள் இன்மையால் சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் பலமாதங்களாக வழங்கப்படாதுள்ளதுடன், ஜூன் 19ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருக்கம் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திர காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவிக்கையில்,
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான அட்டைகள் பற்றாக்குறையாகவுள்ளதால் ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் 08 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமலுள்ளன.
அந்த சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் தனியார்துறையிடம் அச்சிடுவதற்கு வழங்கும் யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.