வங்கி முறை மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி இரண்டையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக இலங்கை நிதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் உள்நாட்டு கடனை மறுசீரமைக்காமல் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு சாத்தியப்படாது என நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த மறுசீரமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை உள்ளடக்கியது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதில் கணிசமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்தில் இலங்கை பிரவேசித்துள்ள நிலையில், கடன் மறுசீரமைப்பைத் தொடரத் தவறினால் இந்தத் திட்டத்தில் பின்விளைவுகள் ஏற்படும்.
அத்துடன் தற்போதைய நிலைமை குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டவும், தெரிவிக்கவும் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.
இதன்போது வங்கி அமைப்பின் சாத்தியமான சரிவு மற்றும் நாட்டில் ஏற்படும் பாதகமான தாக்கம் பற்றிய கவலைகள் உட்பட பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
நாடு இன்னும் தீர்க்கப்படாத குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளதால் இது தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு துயரமான சூழ்நிலையாகும்.
இந்த சவால்களை சமாளிக்க உதவும் திட்டங்களைச் செயல்படுத்துவது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.