தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் நாடு திவால் நிலைக்கு சென்றதால் அனைத்து வெளிநாட்டு நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டு பல்வேறு துறைகளின் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் காரணமாக பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விரிவான கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.