இன்று முதல் பலத்த மழை மற்றும் பலத்த காற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று இன்று முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தென்மேற்கு திசையில் மணிக்கு 25-35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் ஆகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோமீற்றர் ஆகக் காணப்படும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமாக காணப்படும்.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் அதிகரிப்பு 2.5 – 3.0 மீற்றர் ஆகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.