முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்!

மூன்றாம் இணைப்பு

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இன்று மாலை 03.30 மணியளவில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 இடங்களில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு, தடயவியல் பொலிசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13.07.2023 வியாழக்கிழமை அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப் பதிகளுடன் தொடர்புடைய திணைக்களங்கம் மற்றும், அமைப்புக்களுடன் விசேடகலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் இணைப்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பொது மக்கள் அதிகளவானோர் சென்றுள்ளதாகவும் அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ சுமந்திரன் களத்திற்கு சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள்,பொலிஸார்,விசேட அதிரடிபடையினர்,சோகோ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

நீதிமன்ற உத்தரவுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இன்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது புதைக்கப்பட்ட  நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மனித எச்சங்களை பார்வையிட்டதோடு, இன்றைய தினம் 6 ஆம் திகதி அகழ்வு மேற்கொள்வதற்கும், அந்த மனித எச்சங்களை பாதுகாக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமையவே இன்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீதிபதி, சட்டத்தரணிகள் மற்றும் ஆய்வாளர்களின் பிரசன்னத்துடன் அகழ்வு பணி ஆரம்பமாகியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளது உடல்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா அல்லது சரணடைந்த பெண் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரால் சித்திரவதை மற்றும் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனரா எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply