வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளம் காரணமாக மூன்று நாட்களில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அண்டை மாநிலமான உத்தரகாண்டில் பல ஆறுகளின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது.
டெல்லியில் வார இறுதியில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நகரின் சில பகுதிகளில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அங்கு அடைக்கப்பட்ட வடிகால்கள் மற்றும் நீரில் மூழ்கிய சாலைகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குடியிருப்பாளர்கள் சிக்கித் தவித்தனர்.
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அசாம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாமில் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதற்கிடையில், நாட்டின் வடக்குப் பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலங்களில் இந்தியா தொடர்ந்து கடுமையான வெள்ளத்தை சந்தித்து வருகின்றது.
ஆனால், சமீப காலமாக மழையின் தீவிரம் அதிகரித்துள்ளதாகவும், புவி வெப்பமடைதலால் ஏற்படும் காலநிலை மாற்றம் தீவிர மழைப்பொழிவை அதிகப்படுத்துகிறது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து, அடுத்த இரண்டு நாட்களுக்கு அனைத்து பாடசாலை
, கல்லூரிகளுக்கும் அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர்.