கதுருவெல, மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மன்னம்பிட்டிய பகுதியில் விபத்திற்குள்ளாகியது.
குறித்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறும் தெரிவித்துள்ளார்.