தமிழக கடற்றொழிலாளர்களின் கைகளில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன் – சீமான் ஆவேசப் பேச்சு!

தமிழக ஆட்சி அதிகாரம் தன்னிடம் கிடைத்தால் இலங்கை இராணுவத்தினரால் நடுக்கடலில் தாக்கப்படும் தமிழக கடற்றொழிலாளர்கள் கைகளில் வெடி குண்டு மற்றும் ஆயுதங்களை கொடுத்து அனுப்புவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு இலங்கை கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள சூழலில், சீமானின் கருத்து பல்வேறு விமர்சனங்களை தோற்றிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பத்துக்கு தான் விடியும், நாட்டுக்கு விடியல் என்பது கிடைக்காது எனத் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் குறித்த கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற நூறு சதவீத இடங்களும் தங்களது மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் என்று அம்மாநில முதல்வர் சட்டம் இயற்றியுள்ளார்.

தன்னிடம் ஆட்சியை கொடுத்தால் தானும் அதே போல சட்டம் இயற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தை பொறுத்தவரை, இப்போதுள்ள சட்டத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது? எதற்காக பொது சிவில் சட்டம்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசால் முடியவில்லை, ஏனெனில் அங்கு கலவரத்தை நடத்துவதே பா.ஜ.க தான். ஆகவே தான் பா.ஜ.க அல்லாதவர்களை கொலை செய்து வருகிறது எனவும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று முடிவு செய்த பா.ஜ.க. அவர்களின் வரியையும் வேண்டாம் என்று தெரிவித்திருக்கலாமே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தை துண்டாடி, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தமிழர்கள் என திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வருகிறது பா.ஜ.க எனவும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply