நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் விலகத் தீர்மானித்துள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
14 பேர் கொண்ட இந்த விசேட குழுவில் ஒன்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும், ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அற்கம் வகிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், இந்த விசேட குழுவின் தலைவராக செயற்படுகின்றார்.
குழுவின் தலைவராக சாகர காரியவசம் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் இந்த குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.