புலிப் பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றும் செயற்பாட்டில் டிலான்!

இலங்கையில் அரசியல் செய்வதற்கான உரிமை முன்னாள் போராளிகளுக்கும் உண்டு எனவும், இலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகளின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் சிங்கள மக்களை ஏமாற்றும் நோக்கில் தற்போதும் புலிப் பூச்சாண்டி காட்டிக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் பாரதூர குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவரை தனக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டிருக்கின்றார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் முன்னாள் போராளிகள் தொடர்பில் புலிப் பூச்சாண்டி காட்டி சிங்கள மக்கள் மத்தியில் நாடகம் ஆடும் செயற்பாடுகளிலேயே அவர் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

தாங்கள் தற்போது அரச தரப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும் நோக்கமோ அல்லது வேறு எந்த சேட்ட விரோத செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை.

ஆனால் இலங்கை படையினருடனும் பொலிஸ் தரப்புடனும் இணைந்து பணியாற்றியவர்களையே விடுதலைப்புலி மீளுருவாக்கல் எனத் தெரிவித்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முன்னாள் போராளிகளை நசுக்கி சிறையில் அடைப்பதனால் எந்த நல்லிணக்கமும் நாட்டில் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் போராளிகளை சுயாதீனமாக செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆயுதம் தான் மௌத்துள்ளது ஆனால் தமிழருக்குரிய எந்தவிதமான தீர்வுத் திட்டங்களும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தமிழர் பிரச்சினையில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி கூடிய விரைவில் ஒரு தீர்வை எட்ட வேண்டிய தேவை இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply