யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் சி.சிறிசற்குணராஜா முன்னிலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதிகளின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று காலை ஒன்று கூடியது.

இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் , சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா ஆகிய நால்வரும் பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் தமது அளிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சுற்று நிருபத்தில் வரையறுக்கப்பட்ட புள்ளித் திட்டத்துக்கமைய ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் தனித் தனியாகப் புள்ளிகளை வழங்கியுள்ள நிலையில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் முறையே பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில், பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து1978 யாப்பின்படி  16 ஆம் இலக்க பல்கலைக் கழகச் சட்டத்துக்கு அமைவாகபல்கலைக்கழகப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply