தமிழ் மக்கள், 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், இதனை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்துவதானது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாகவே காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தச்சட்டமென்பது இலங்கை- இந்திய அரசாங்கங்களினால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே தவிர, இதனை தமிழ் மக்கள் ஒருபோதும் கோரவில்லை எனத் தெரிவித்தார்.
எனவே, 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்தியாவே அதிக அக்கறை கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் கோருவதானது, தமிழ் மக்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றே அர்த்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு செய்வது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை 13 இற்குள் முடக்கும் செயற்பாடு என்றும் விமர்சித்த அவர், தமிழ்க் கட்சிகளின் இயலாமையை இந்த விடயம் காண்பிப்பதாகவும் தெரிவித்தார்.