சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு, தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு.
ஆனால் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமே முடிவு செய்யும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
எனவே இது தொடர்பில் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இனப் பிரச்னைக்கான தீர்வு தொடர்பாக தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரித்து விட முடியாது.
அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அந்தத் தீர்வை வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் நாடாளுமன்றமும் அரசுமே முடிவு செய்ய முடியும்.
எனவே அதிகாரப் பகிர்வு தொடர்பில் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம் என சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவிற்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தரப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன.
இந்தநிலையில், “தமிழர்கள் கோரும் சமஷ்டியை ஒருபோதும் அரசு வழங்காது. அதனைக் கோருவது பயனற்றது” என அரச தரப்பு ஆளும் கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.