தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
“நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை” என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், தற்போதுள்ள தபால் திணைக்கள கட்டளைச்சட்டம் பதவியின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதால், அதனை உடனடியாக திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் 80 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் வலியுறுத்தினார்.
புதிய தபால் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதனை இந்த ஆண்டு நிறைவேற்றி, அது தொடர்பான எதிர்கால பணிகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் தற்போது நட்டத்தை ஏற்படுத்தும் அரச நிறுவனங்களில் தபால் திணைக்களமும் ஒன்று எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 2022 டிசம்பர் 31 ஆம் திகதி தபால் திணைக்களத்தின் வருமானம் ரூ. 7,000 மில்லியன் ஆகவும், செலவுகள் ரூ. 14,000 மில்லியன் ஆகவும் காணப்பட்டதையடுத்து, இழப்பை ஈடுகட்ட தேவையான நடைமுறைகளை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
“நாங்கள் இழப்பை இந்த ஆண்டுக்குள் 4,000 மில்லியனாகவும், டிசம்பர் 2024 க்குள் இலாபம் மற்றும் நட்டத்தை சமப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.