முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைக்குழி, தொடர்பில் மிக நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடி கொண்டிருக்கின்ற தாய்மாருக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என வடக்கு கிழக்கு மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா? என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கின்றது.
எனவே, இந்த புதை குழியையும் சாதூரியமாக மூடி மறைக்கின்ற வேலையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் விலகவே முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கும் முழுமையான பதிலை கூற வேண்டிய கடமை இந்த அரசாங்கத்துக்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.