மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இலங்கையின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று தென்மேற்கு திசையில், மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.
பொத்துவிலிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக மன்னார் கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.