வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலமையில் வவுனியா பிரதேச செயலாளருடன் இணைந்து வவுனியா பிரதேச செயலகத்தில் கடந்த 16.7.2023 அன்று போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தயட்சகர்கள், தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , என பல உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் , கிராம சேவகர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் போது போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் பல பகுதிகள் பொதுமக்களால் அடையாளம் காட்டப்பட்டிருந்ததுடன் இதற்கு பொலிஸாரும் துணை போவதாகவும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் , வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்ட பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
குறித்த பரிசோதனையின்போது, தலா 5 மில்லிகிராம் ஹெரோயினுடன் 84 கிராம் மாவா போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்களும் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் பகுதியில் சிறு வியாபாரம் செய்யும் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 428 கிராம் மாவா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.