சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை – பௌத்த சின்னமாக பிரகடனப்படுத்த வலியுறுத்தல்!

முல்லைத்தீவு குருந்தூர்மலையை, பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

இதனை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால், இன ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள், குருந்தூர் விகாரை வளாகத்தில் பொங்கல் நிகழ்வொன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்த முயற்சித்தனர். எனினும் பொலிஸார் இதற்கு இடம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரவிகரன் உள்ளிட்ட சிலர், இன்றைய தினமும் அங்கே பொங்கல் நிகழ்வொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

1931 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குருந்தூர்மலை என்பது பௌத்த தொல்பொருள் சின்னமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அங்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளிலும், அங்கு எந்தவொரு இந்துமத அடையாளங்களும் கண்டெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அங்கே எந்த இடத்திலும் தமிழ் எழுத்துக்களோ இந்து மதச் சின்னங்களோ காணப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர்மலை பகுதியில் இந்துமத ஆலயம் இருப்பதாக இந்த பிரிவினைவாதிகள் தெரிவித்து வரும் கருத்துக்களின் காரணத்தினால்தான், அங்கு தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குருந்தூர்மலையை பௌத்த தொல்பொருள் சின்னமாக மீண்டும் அறிவித்தால், இந்த முரண்பாடுகளை இல்லாது செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால், இதனால் பாரிய சர்ச்சைகள் ஏற்படும் என்பதோடு, தேசிய ஐக்கியத்திற்கும் இது பாதிப்பாக அமைந்துவிடும் என அவர்  தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply