இலங்கையில், நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்த முயற்சிகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி, அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி அண்டைய நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசாங்கம், இந்திய மக்களுக்கும் ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
