மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

மலையக மக்களின் மேம்பாட்டுக்காக  இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தொகை மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் இவற்றுள் உள்ளடங்கும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இரு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு நாடு திரும்பிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜீவன் தொண்டமான் இந்தியா சென்றிருந்த நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகள், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், எரிசக்தி மற்றும் மின்சக்தி துறைக்கான முதலீடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளார்.

இதில் குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசியபோது , வீடுகளை நிர்மாணிப்பதால் மாத்திரம் பிரச்சினை தீராது, வீடுகள் அமைக்கப்பட்ட பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும், அதற்கு கல்வியே திறந்த வழியாக அமையும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையிலேயே மலையக பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான அரச அங்கீகாரத்துடனான தேசிய விழா நவம்பரில் நடத்தப்படவுள்ளதாகவும் இந்நிகழ்வுக்கு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறப்பு தூதுவர் ஒருவர் பங்கேற்பார் எனவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply