பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்கவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை நியூ கலிடோனியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி, இலங்கை வருவதற்கு முன்னர் வனுவாட்டு மற்றும் பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும் .
இதேவேளை, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா ஜூலை 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
ஜப்பானிய வெளியுறவு அமைச்சருடன் மூத்த வெளியுறவுக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் முரகாமி மனாபு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெனரல் அரிமா யுடகா, சர்வதேச ஒத்துழைப்பு இயக்குநர் ஜெனரல் எண்டோ கசுயா, ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தின் துணை செய்திச் செயலாளர் ஒகானோ யுகிகோ மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தின் 22 அதிகாரிகளைக் கொண்ட குழுவினரும் உள்ளனர்.
மேலும், இலங்கையிலுள்ள ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி தளங்களில் ஒன்றையும் பிரதிநிதிகள் குழு பார்வையிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.