ஜனாதிபதியை சந்தித்த புதிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கக்குழு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

சந்தைப் பெறுமதி மற்றும் செயற்திறனை அடிப்படையாக கொண்ட சம்பள கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தல், புத்திஜீவிகள் வெளியேற்றத்தை மட்டுப்பத்தல் மற்றும் வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு மேற்படி அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டதோடு, அது தொடர்பிலான பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

இந்நாட்டின் சுகாதார துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய உடனடி மறுசீரமைப்புக்கள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அது தொடர்பாக ஆலோசனைகளை முன்வைக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டங்களின் ஊடாக புதிய மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அத்திட்டங்களை வகுக்கும் போது, ஸ்கெண்டினேவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றகரமான சுகாதார கட்டமைப்பு தொடர்பில் ஆராய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன, செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, உப தலைவர்களான வைத்தியர் சந்திக எபிடகடுவ, வைத்தியர் ஹேமந்த ராஜபக்‌ஷ, வைத்தியர் போதிக்க சமரசேகர, வைத்தியர் எஸ்.மதிவானன் உள்ளிட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply