ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் வைத்து சந்திந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்தடைந்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி, இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானிய சட்டமன்ற உறுப்பினர் முரகாமி மனாபு, மூத்த வெளியுறவுக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் அரிமா யுடகா, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் எண்டோ கசுயா, சர்வதேச ஒத்துழைப்புக்கான இயக்குநர் ஜெனரல் ஒகானோ யுகிகோ, ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் துணைப் பத்திரிகைச் செயலர் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளைக் கொண்ட 22 உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்று இலங்கை வந்தடைந்தது.