நாடு முழுவதும் காணாமல்போனோர் தொடர்பில், ஐந்து மாவட்டங்களை மையமாகக் கொண்டு முறைப்பாட்டு விசாரணை நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொலன்னறுவை, இரத்தினபுரி, அனுராதபுரம், கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த முறைப்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளன.
இந்த முறைப்பாடுகள் அனைத்தும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்ட காலத்திலேயே கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறைப்பாட்டு விசாரணைக்காக பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 69 குடும்பங்கள் அழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 29 குடும்பங்களும், அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 குடும்பங்களும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களும், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 51 குடும்பங்களும் அழைக்கப்பட்டுள்ளதாக மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்திற்கு இதுவரை மூன்று பிரிவுகளின் கீழ் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
இதில் 2000 முதல் 2021 ஆம் ஆணடு வரையிலான முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
1981 முதல் 1999 ஆம் ஆண்டுவரை காணாமல் போனவர்கள் இரண்டாம் வகை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகள் மூன்றாவது பிரிவில் உள்ளடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
கடந்த 16 மாதங்களில் 3 ஆயிரத்து 464 முறைப்பாடுகள் காணாமல் போனோர் அலுவலகத்தால் விசாரிக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த,
“காணாமல் போனவர்கள் வடக்கு-கிழக்கு மாவட்டங்களில் மட்டும் இல்லை. மொத்தம் 24 மாவட்டங்களிலும் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்புகளால் காணாமல் போனவர்களும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பகுதிகளில்தான் மக்கள் காணாமல் போனதாக உலகில் பலர் நினைக்கின்றனர்.
மேலும் தகவல்களை சேகரிக்க பொலன்னறுவை, இரத்தினபுரி, அனுராதபுரம், கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய ஐந்து இடங்களுக்கும் தாம் செல்வதாகவும், இப்பணி குறித்து சர்வதேச நிறுவனங்களுக்கு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களை மட்டுமே தாங்கள் தேடுகிறோம் என தென்னிலங்கை மக்கள் கூறுகின்றனர் எனவும் தாங்கள் பணிகளை சரியாக செய்யவில்லை என வடக்கு-கிழக்கு மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், காணாமல் போனவர்கள் தொடர்பில் தாங்கள் அனைத்தையும் ஒழுங்காகச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 4ம் திகதி மீண்டும் வடமாகாணத்திற்குச் சென்று காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 2 ஆயிரத்து 351 நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.
அத்துடன், கடந்த மாதம் முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி நேற்று ஹர்த்தாலையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.