இலங்கைக்கு வெளியில் தமிழீழம் அமைக்கப்பட்டு விட்டது எனவும், அமெரிக்காவின் டெக்சாஸில் வசிக்கும் சட்டத்தரணி உருத்திரகுமாரை பிரதமராக நியமித்து, தனியான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சர்வதேசத்தில் தமிழீழ அரசாங்கத்தை அமைத்து முடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் அவர்களின் அரசியல் தேவைக்கு அமைய தற்போது தனியான நாட்டை கோரி, அதனை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது எனவும் ஆயுதங்களை மாத்திரமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஏந்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவை அனைத்தையும் ஆராயும் போது நாட்டுக்கு மிகப் பெரிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் இவர்களுடன் சம்பந்தப்பட்டு செயற்பட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
சுரேந்திரன் போன்றவர்கள் நேரடியாக பிரிவினைவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதுடன் சர்வதேசத்துடன் அது சம்பந்தமான விடயங்களை கையாண்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் உலகில் ஏனைய நாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். இது மிகவும் பயங்கரமான நிலைமை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு கடந்த அரசாங்கம் என்பது புதிய விடயமல்ல, திபேத் என்ற நாடு இல்லாத போதிலும் தலாய் லாமா அந்நாட்டின் நாடு கடந்த அரசாங்கத்தின் தலைவராக இதுவரை செயற்பட்டு வருகிறார்.
அதேபோல் பாலஸ்தீனம் என்ற நாடு உலக வரைப்படத்தில் இல்லாமல் போன பின்னர், அதன் தலைவராக யசீர் அரபாத் செயற்பட்டு வந்தார். பாலஸ்தீனத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்கும் உரிமையும் இருந்தது.
திபேத் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் சென்ற பாதையில் சென்றே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றதா இல்லையா என்பதை கூகுள் தேடுத்தளத்திற்கு சென்று தேடினால் அறிந்துக்கொள்ள முடியும்.
அப்போது நான் கூறியது உண்மையா பொய்யா என்பது தெளிவாகும் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.