13ஆவது திருத்தம் தொடர்பில் ரணிலின் அடுத்த நகர்வு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்து இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியதுடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தமக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும், நாட்டில் பெரும்பான்மையினரால் எழுந்துள்ள கரிசனை காரணமாக ஆரம்பத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது விசேட உரையின் போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனைகளையும் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply