அரசியல்வாதிகளின் விருப்பப்படி நியாயமற்ற முறையில் மானியங்களை வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதியளித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தற்போதைய அரசாங்கம் குறைந்தபட்சம் 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த தன்னிச்சையான மானியங்களை நீக்கியுள்ள அதே நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டமான அஸ்வெசும திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் இக்குறைபாடுகளை களைய அரசாங்கம் செயற்படும் எனத் தெரிவித்த சேமசிங்க, மிகவும் தகுதியான மக்கள் குழுக்களுக்கு மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் சமுர்த்தி நலன்புரி உதவிகளை குறைக்காது என உறுதியளித்தார்.
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்காக தகுதியற்ற 3 லட்சத்து 93 ஆயிரத்து 94 பயனாளர்களுக்கு சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை அனுமதி வழங்கியது.
ஆரம்பச் சுற்றில் மொத்தம் 1 மில்லியன் 7 லட்சத்து 92 ஆயிரத்து 265 தகுதியான பயனாளிகள் அஸ்வெசும நலத்திட்ட உதவிகளை வழங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் அவர்களில் ஆட்சேபனைகளைப் பெறாத அல்லது மேல்முறையீடு செய்யாத 1 மில்லியன் 5 லட்சத்து 88 ஆயிரத்து 835 பேர் சமுர்த்திக் கொடுப்பனவைப் பெறுவார்கள்.
84 ஆயிரத்து 374 பயனாளிகள், அஸ்வேசும திட்டத்திற்காக மேல் முறையிட்டுள்ள நிலையில், மேல்முறையீடுகளின் மதிப்பீடு முடியும் வரை, அவர்கள் ஏற்கனவே உள்ள பிரிவின் கீழ் செலுத்தப்பட்ட தொகையைப் பெறுவார்கள் எனவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், ஆட்சேபனைகள் எழுப்பப்பட்ட 1 லட்சத்து 19 ஆயிரத்து 56 அஸ்வெசும பயனாளிகளுக்கு, ஆட்சேபனை மறுபரிசீலனை முடியும் வரை அரசாங்கம் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கும்.
மேலும், முதியோருக்கான கொடுப்பனவுகள் வழமை போன்று தபால் நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் அதேவேளை, சிறுநீரக நோயாளர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும்.
தற்போது முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் மற்றும் ஊனமுற்றோர் நிலையங்களில் வசிக்கும் 11 ஆயிரத்து 660 நபர்கள் மற்றும் மதகுருமார்களும் வழமை போன்று தமது நலன்புரி உதவிகளை பெற்றுக் கொள்வார்கள்.