சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் தனி உடமையல்ல அது எல்லோருக்கும் பொதுவுடமை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கில் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் தமது இலக்காக சமஸ்டியை தான் முன்வைத்திருக்கிறார்கள்.
இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை, அனைத்து தேர்தலிலும் இவ்வாறான ஒரு லட்சியத்தை முன்வைத்து தான் வாக்குகளை கேட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நான் கூட கடந்த வடமாகாண சபையின் முதலாவது தேர்தலின் போது இங்கு வந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன், ஆகவே மக்கள் ஆணை வழங்கப்பட்டு இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். கூட்டாட்சி என்றால் என்ன கூட்டாட்சி என்றாலும் சமஸ்டிதான், ஆனால் அதை அடையும் வழிமுறைகளில் தான் ஒவ்வொருவரும் மாறுப்படுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் தனி உடமையல்ல அது எல்லோருக்கும் பொதுவுடமை, அது தந்தை செல்வா காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே நாம் எல்லோரும் சேர்ந்து அதாவது தமிழ் தேசிய கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையக கட்சிகள் எல்லோரும் சேர்ந்து ரணில் விக்ரமசிங்கமிடம் கோரிக்கை விடுப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது முதலில் வடக்கு கிழக்கில் என்றாலும் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் எனக் கூறுவோம், அதற்கு இந்தியாவும் ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அந்த மாகாண சபை தேர்தலிலே போட்டியிடுகின்ற காட்சிகள் தமது கோரிக்கைகளை முன்வைக்கின்ற போது மக்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதை பார்த்து, அதுவே மக்கள் ஆணை என்று எடுத்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
அதை வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்திடம் அதாவது ரணிலாக இருக்கலாம் நாளை சஜித் வரலாம், அநுரகுமார வரலாம் இப்படி யாரும் வரலாம் அவர்களோடும், இந்திய அரசாங்கத்துடனும் சேருவோம் அதுத்தான் சரியான பாதையாக இருக்கும் என்பதை ஈழத் தமிழ் உறவுகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.