சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளது.
சிறுவர்கள் அதிக நேரத்தை ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளுடன் செலவிடுவதால் தூக்கமிழப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படும் நிலையில், சீன அரசாங்கம் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை சீன அரசாங்கம் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி,16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 1 மணி நேரமும், 8 வயதுக்கு உட்பட்டவர்கள் 40 நிமிடங்கள் மட்டுமே ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்த வேண்டும்.
மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் ஸ்மார்ட் கைத்தொலைபேசி இணைய சேவையை பயன்படுத்தக் கூடாது என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பாக மக்களின் கருத்துகளைத் தெரிவிக்க எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் கருத்துக் கணிப்பின் பின்னர், இந்த விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் இணைய விளையாட்டுக்களை விளையாடக் கூடாது என கடந்த 2019 ஆம் ஆண்டு சீன அரசாங்கம் கட்டுப்பாடு விதித்தமை குறிப்பிடத்தக்கது.