யால பருவத்தில் நிலவும் கடும் வறட்சி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வருட யால பருவத்தில் கடும் வறட்சியை எதிர்நோக்க நேரிடும் எனவும், எனவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் விவசாயிகள் பல நெற்செய்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமரவீர மேலும் தெரிவித்தார்.
மேலும், உரங்களை கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சின் ஊடாக கணிசமான நிதி மானியங்கள் வழங்கப்படுவதனால் அரசாங்கத்திற்கும் கணிசமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமரவீர, விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகார சபை, வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் வறட்சி மற்றும் நீர்ப் பற்றாக்குறை குறித்து விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு வழங்காமைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.