ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான மக்கள் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான மக்கள் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்வும்,மக்கள் சந்திப்பும் நேற்று மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
 ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான அமைப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மக்கள் பணிமனையினை திறந்து வைத்ததுடன் மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் பிரதி அமைச்சர் அனோமா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான பொத்துவில் தொகுதி  செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டு சபையில் மக்கள் அங்கீகாரம் பெறப்பட்டது.
இந்நிகழ்வில் பொத்துவில் தொகுதியில் உள்ள அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், பாணம, நிந்தவுர், காரைதீவு போன்ற பிரதேசங்களிலிருந்து கூடுதலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
இங்கு கட்சியின் செயலாளர்  பாலித ரங்கே பண்டார உரையாற்றும்போது,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் பொத்துவில் தொகுதி,கல்முனைத் தொகுதி, சம்மாந்துறைத் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெற்று அதன் உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தனர்.
இனத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள்  இன்று இனவாத,மதவாத,பிரதேச வாதங்களை கட்டவிழ்த்துவிட்டு தேசிய ஒருமைப்பாட்டை இல்லாமல் செய்துவிட்டனர்.
தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நலனுக்காகவும் பெரும் பங்களிப்புச் செய்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். 2020 இல் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்தார்கள். ஆனால் 2022 இல் ரணில் விக்ரமசிங்கவின் தனிமனித ஆளுமையை வேண்டி இந்த நாடு நின்றது. தனிமனிதனாக நாட்டைப் பொறுப்பெடுத்தவர் சர்வதேசத்தின் ஆதரவுடன் நாட்டை மீட்டெடுத்து மக்களை பட்டனிச்சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார் என்றார்.
இங்கு தயா கமகே உரையாற்றும்போது, அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பலம் பொருந்திய சக்தியாகக் காணப்பட்டது. ஆனால் நமது தலைவர்களின் செயற்பாட்டினால்  ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.
அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனும் இங்கு வந்து  இனவாதம் பேசி  வாக்குகளை சூரையாடிச் சென்றனர். இனியொரு போதும் அந்த நிலைக்கு விடமாட்டோம் என்றார்.
(கே. எ.ஹமீட்)

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply