கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்படவிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி, அதன் ஒருங்கிணைப்பாளர் விதானகே மதுஷான் சந்திரஜித் உட்பட 9 பல்கலைக்கழக மாணவர் சம்மேளன உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், காலி முகத்திடல் மற்றும் அருகிலுள்ள பல இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடமையில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை விதித்த நீதவான், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார்.
கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரிகளிடம் எழுத்து மூலம் கையளிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவில், இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான போராட்டங்களினால் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.