உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் வீரர்கள்!

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இலுப்பைக்கடவை பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.கே.வொலன்ரைன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது சாதனை வீரர்கள் பவனியாக வாத்திய இசையுடன் பாடசாலை வரை அழைத்து வரப்பட்டனர்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு விருந்தினர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, பரிசில்களும் வழங்கப்பட்டன.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப்பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி யாழ், ஹாட்லி கல்லூரி மைதானத்தில் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று நிறைவடைந்தது.

வடமாகாண கல்வி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த இந்த உதைபந்தாட்ட போட்டியில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 39 பாடசாலை அணிகள் கலந்து கொண்டிருந்தன.

இறுதிச் சுற்றில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அணியும், மன்னார் இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய அணியும் மோதிக் கொண்டன.

இதன் போது மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அணியினை எதிர்கொண்டிருந்த இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டியில் விளையாடுவதற்குரிய வாய்ப்பை பெற்றுள்ளது.

25 வருடங்களின் பின்னர் மன்னார் மாவட்டத்தில் 18 வயதுப்பிரிவு ஆண்கள் உதைப்பந்தாட்டத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply