உலகளாவிய மனிதாபிமான அமைப்பான ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல், 12.8 மில்லியன் டொலர் பெறுமதியான புற்றுநோய்க்கான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சுனிதினிப் மாலேட் என்ற புற்றுநோயியல் மருந்தை உள்ளடக்கிய இந்த நன்கொடை, நாட்டின் பொருளாதார நெருக்கடியால் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் இலங்கையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்கு பயன்படுத்தப்படும்.
இந்த நன்கொடை வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றால் வழங்கப்பட்டது. இது நாளை மறுதினம் கொழும்புக்கு வர உள்ளது. நன்கொடையுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த தாராள நன்கொடைக்காக ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் எனவும், இந்த நன்கொடை இலங்கையில் உள்ள பல புற்றுநோயாளிகளுக்கு உயிர்காக்கும் எனவும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனித் விக்கிரமசேகர தெரிவித்துள்ளார்.
ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி தேவைப்படும் மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பொருட்களை வழங்கி வருகிறது. இந்த அமைப்பு பயனுள்ள மற்றும் திறமையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவைக் கொண்டுள்ளது.
இந்த நன்கொடையானது இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பல்வேறு சவால்களை எதிர்நோக்கும் புற்றுநோயாளிகளுக்கு சிறந்த நிவாரணமாகும். பொருளாதார நெருக்கடியால் புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நன்கொடையானது இலங்கையில் உள்ள புற்றுநோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதிப்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.