13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் ஊடாக முழுமையான அதிகாரங்களை வழங்க முயற்சிப்பது மறைமுகமாக ஈழத்தை வழங்குவதாக இருக்கும் என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான லெப்டினட் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையை இரண்டாக பிளவுப்படுத்துவதற்கு எதிரான அமைப்பு, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கொழும்பு தும்முல்லை சம்புத்த ஜயந்த விகாரையில் நேற்று நடத்திய கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நாட்டுக்காக உயிர்களை தியாகம் செய்த படையினரை மாத்திரமல்லாது, மக்களை காட்டிக்கொடுக்கும் செயல்.
தற்போது இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்பட்டு, இராணுவத்தினரை குறைத்து, வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் உரிமைகள் அழிக்கப்படுகின்றன.
பெற்றுக்கொள்ள முடியாது போன தமிழீழத்தை 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. எனவும் ஜகத் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.