வடக்கு, கிழக்கை மட்டுமல்ல முழு இலங்கையும் எமது தாயகம் தான் எனக்கருதி இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
நாட்டு வளங்களை பாதுகாப்பதற்கான போராட்டமே இரண்டாவது சுதந்திர போராட்டமாகும்.
வடக்கு, கிழக்கு தமது தாயகம் என தமிழ் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கூறுகின்றனர். இவர்கள் ஏன் இரு பகுதிகளை மட்டும் தாயகமாக கருத வேண்டும். முழு நாடும் எமது தாயகம் என கருதுங்கள். நாம் அனைவரும் இலங்கையர்கள்.
யாழ். நாகதீபம் எமது பகுதி என நாம் உரிமைகோரவில்லையா? அதுபோல தமிழ் மக்களும் முழு இலங்கையும் தமக்கானது என எண்ண வேண்டும்.
இன்று எமது நாட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன. தேசிய சொத்துகள் விற்கப்படுகின்றன. சொந்த நாட்டிலேயே வாடகைக்காரர்கள்போல் வாழ வேண்டிய நிலைமை. இந்நிலைமை மாற வேண்டும்.
இந்நாடு எமது உரிமை. அதற்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற எண்ணம் நாட்டு மக்களுக்கு வர வேண்டும். அப்போதுதான் எமது மரபுரிமைகளைக் காக்கலாம். வளங்களை காப்பதற்கான 2ஆவது சுதந்திர போராட்டத்துக்கு அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும்.
அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்ததன் மூலம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தொல்பொருள் என்பது ஒரு இனத்துக்குரியது அல்ல. ஒரு பழமையான ஆலயம் இருந்தால் அதனையும் அனைவரும் பாதுகாக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருட்களை பாதுகாக்குமாறு தமிழ் மக்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
கடந்த 75 ஆண்டுகளாக தமிழரோ, சிங்களவர்களோ வெற்றிபெறவில்லை. மாறாக கலவர பூமியில் தான் மோதிக்கொண்டோம்.
வடக்கிலும், தெற்கிலும் உள்ள அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் சிக்கிவிட வேண்டாம்.
இலங்கையர் என்ற முறையில் நாம் அனைவரும் பிரதேச இனவாதமின்றி இந்நாட்டை கட்டியெழுப்புவோம்” எனவும் தெரிவித்தார்.