யாழ் மாவட்டத்தில் இரவில் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த கும்பல் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு, திருடப்பட்ட 30 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் இரவு வேளைகளில் கூரையினை பிரித்து வீட்டுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கத்தியை காட்டி நகைகளை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான அணியினரால் குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து சங்கிலியன் வீதி பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட 24 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு, இணுவில் பகுதியில் திருடப்பட்ட நான்கு பவுண் நகையும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், வாள் மற்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நல்லூர் பின் வீதியால் செல்லும் வயது முதிர்ந்தவர்களை மிரட்டி கைத்தொலைபேசிகளும் சிறிய தொகை பணமும் திருடும் சம்பவங்களிலும் குறித்த சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.