அடுத்த அரகலயவில் இரத்த ஆறு ஒடும் – அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

நாட்டில் அடுத்த அரகலய அமைதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாகத் தான் இருக்கும் எனவும் மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என இலங்கை அரசுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சப்பாத்தாக தான் இருந்திருந்தால் கூட பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டிருப்பேன் எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தோல்விப் பயம் காரணமாக ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்குச் செல்லவில்லை எனத் தெரிவித்த அவர், நாட்டின் வீழ்ச்சியை ரணில் விக்ரமசிங்கவால் விரைவாகத் தடுத்து நிறுத்த முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அவரால் முன்னேற முடியவில்லை. ஊழல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசில் உள்ளார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் திருடுகின்றார் என தான் நினைக்கவில்லை எனவும், அவரைச் சுற்றியுள்ள அனைவரும் திருடுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சரை உதாரணமாக எடுத்துக்கொண்டால் அவரின் அமைச்சில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் மக்கள் இறந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியதோடு,  அவரை அமைச்சுப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலிருந்தும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான பிரேரணைகளைக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஊழல், மோசடியே நாட்டைப் பின்னுக்குத் தள்ளும். இவ்வாறான ஊழல், மோசடி வஞ்சகர்கள் அதிகாரத்தில் உள்ளார்கள். மக்கள் கோபமாக இருக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்ஷவின் விலகலுக்குப் பின்னரும் அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த அரகலய அமைதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply