ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டெழவும் மிகவும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்குமென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் தெரிவித்துள்ளார்.
பிரஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதரகத்தில் நடைபெற்ற “இலங்கையின் நண்பர்கள்“ என்ற சினேகப்பூர்வ இரவு விருந்துபசார நிகழ்விலேயே இந்த கருத்தை தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் வெளியிட்டார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய மக்கள் கட்சியின் அங்கத்தவர் உட்பட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு, சுற்றுலா, ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நாட்டை பொருளாதார சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பக்கபலமாக இருக்கும்.
இலங்கை அரசாங்கத்தின் மூலோபாயத்தின் விரிவான கண்ணோட்டத்தை தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் வரவேற்றார்.
சவாலான காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியான ஆதரவு மற்றும் உதவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவுக்கும் தூதுவர் பாராட்டு தெரிவித்தார்.
அடுத்த தசாப்தத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை புதிய ஒழுங்குமுறை தொடர்பான விவாதங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP பிளஸ் வரிச்சலுகைகளை தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை தூதுவர் வலியுறுத்தினார்.
மேலும் சுற்றாடல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை நடவடிக்கைகளுக்கான இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பு குறித்தும் விளக்கமளித்தார்.
2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் இலட்சிய இலக்கை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் காடுகளை விரிவுபடுத்துவதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் இலங்கையின் முயற்சிகளையும் எடுத்துரைத்தார்.
ஐரோய்ப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கையின் நண்பர்கள் குழுவின் தலைவர் உறுதியான கொள்கைகள் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நாட்டை ஒரு நேர்மறையான பாதைக்கு இட்டுச் செல்லவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP பிளஸ் வரிச்சலுகைகளை தொடர்ந்து வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.