ஆரம்பமாகிறது ஐ.நா கூட்டத்தொடர் – இலங்கையின் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவாலை, மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கவுள்ளதாக சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில், குற்றங்களை செய்தவர்களை பொறுப்புக்கூறும்படியும், அத்துடன் வன்முறைக்கு வழிவகுத்த அடிப்படை நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இலங்கையை, மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துகிறது.
மேலும் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செம்மையாக்கப்படாத அறிக்கை ஏற்கனவே வெளியாகியிருந்ததுடன், அதற்கான பதிலை இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டல், மதிப்பீடு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான ஆணை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் வழங்கப்பட்டது.

இந்த தீர்மானம் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில் மீளவலியுறுத்தப்பட்ட நிலையிலேயே, இன்று ஆரம்பமாகும் 54 ஆவது கூட்டத் தொடரில் இந்த தீர்மானம் சார்ந்த முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply