சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 அமைப்பின் 2023 ற்கான மாநாடு டெல்லியில் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, பிரேசில் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ, பசுமை பருவநிலை நிதிக்கு (ஜிசிஎஃப்) சுமாா் ரூ.16,000 கோடி வழங்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளாா். இந்த நிதியானது, கடந்த 2020 – 2023ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பசுமை பருவநிலை நிதிக்கான இங்கிலாந்தின் முந்தைய பங்களிப்பைவிட 12.7% அதிகம் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்நாட்டில் கரியமிலவாயு உமிழ்வைக் குறைப்பதோடு, பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் சமூகங்களுக்கு உதவுவதன் மூலம் பருவநிலை சாா்ந்த தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற இங்கிலாந்து முனைப்புகாட்டி வருகிறது. இங்கிலாந்து உள்பட ஒட்டுமொத்த உலகையும் மேலும் வளமானதாக, பாதுகாப்பானதாக மாற்ற எனது அரசு முன்னிலையில் நின்று செயலாற்றும்’ என்று ரிஷி சுனக் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.