இலங்கையில் பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழு அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கு இலங்கை அதிகாரிகள் சட்டங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதையும் கண்டித்துள்ளது.
கனடா வடக்கு மசிடோனியா மலாவி மொண்டினீகுரோ ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான முக்கிய குழு காணிப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை முக்கியமான கடப்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த அர்ப்பணிப்புகளை அர்த்தமுள்ள செயலாக மாற்றவும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளை வழங்கவும் இலங்கையை தாம் ஊக்குவிப்பதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
எனினும் நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54வது அமர்வின் போது இலங்கை தொடர்பான முக்கிய குழு தெரிவித்துள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான தயாரிப்புகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள முக்கிய குழு சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் நிலைமாறுகால நீதியை முன்னெடுக்கும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் சிவில் சமூகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் எதிர்ப்பை அடக்குவதற்கு சட்டங்களை தன்னிச்சையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் தாம் கவலையடைவதாகவும் முக்கிய குழு தெரிவித்துள்ளது.