கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்றாக பல அடுக்குகளாகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் உள்ளன என்பதை இனங்காண்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் 6 ஆம் நாள் அகழ்வாய்வுகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த அகழ்வாய்வுகளில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, நேற்றைய அகழ்வாய்வுகள் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா தெரிவிக்கையில், 5 ஆம் நாள் அகழ்வாய்வுகளில் இரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு துப்பாக்கி ரவையும் தடயப் பொருளாக மீட்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றின் மீது ஒன்று மிக நெருக்கமாகவும், பல அடுக்குகளாகவும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் காணப்படுவதாகவும், அதன் காரணமாக எத்தனை மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளன என்பதை தற்போது இனங்காண முடியாதுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
படிப்படியாக அகழ்வுகளை மேற்கொண்டு, மனித எச்சங்களின் மேலுள்ள மண்ணை அகற்றும்போது தான் எத்தனை மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் உள்ளன என்பதை இனங்காண முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு தினங்களில் எத்தனை எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது மொத்தம் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 14 மீற்றர் நீளத்திலும், 3 மீற்றர் அகலத்திலும், 1.5 மீற்றர் தொடக்கம் 2மீற்றர் வரையான ஆழத்திலும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தோடு கடந்த சனிக்கிழமையன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தகடு ஒன்று எடுக்கப்பட்டது. அதுதொடர்பில் பின்னர் அறியத்தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.