முட்டை இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்றும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 34 இலட்சத்து 20 ஆயிரம் புதிய கோழிக் குஞ்சுகள் தற்போது கோழிப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலும், அந்தக் கோழிகள் டிசம்பர் மாதத்திற்குள் முட்டையிடும் பருவத்திற்கு வளர்ந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர், நாட்டில் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான தீவன உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தத் தொழில்துறையினருக்கு வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்காக குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், 2023 முதல் 2028 வரையிலான ஐந்தாண்டுத் திட்டம் ஒன்று தேசிய பால் உற்பத்திக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச கால்நடைப் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதுடன், இந்தத் தொழில் துறையின் அபிவிருத்திக்கு அதிக பங்களிப்புகளை வழங்கும் தனியார் கால்நடைப் பண்ணைகளை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply