சனல் 4 காணொளி இராணுவத்தினரை வேட்டையாடும் முயற்சி-தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு!

இஸ்லாமிய அடிப்படைவாத திட்டங்களை மறைத்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பொறுப்பை இராணுவத்தின் மீது சுமத்தி, அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தின் இறுதி நோக்கம் என்ன என்பது தற்போது நன்றாக தெளிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

பொறுப்புக்கூற வேண்டிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என ஒரு புறம் சம்பந்தன் கூறுகிறார். அதேபோல் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளரும் அதனையே கூறுகிறார்.

2015 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினருக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட 30/1 யோசனையின் பின்னரும் இதே விதமாக இலங்கை படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

சனல் 4  தொலைக்காட்சி என்பது பணம் செலுத்தினால், இலஞ்சம் வழங்கினால் சத்திட்டங்கள் சம்பந்தமான காணொளிகளை ஒளிப்பரப்பும் தொலைக்காட்சி.

இதற்கு முன்னர் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியில் தயாரிக்கப்பட்ட காணொளிமூலம் இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு எதிராக குற்றம் சுமத்தினர்.

தற்போது வெளியிட்டுள்ள காணொளி மூலம் ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை புலனாய்வுப் பிரிவினர் மீது சுமத்தியுள்ளனர்.

இதில் பிரதான கதாநாயகன் பாத்திரத்தில் நடித்த அசாத் மௌலானா அரசியல் தஞ்சத்தை எதிர்பார்த்துள்ள நபர் என்பது மிகவும் தெளிவானது. தற்போது அவர் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோர முடியும்.

இந்த காணொளி மூலம் நன்மை பெறும் மூன்று தரப்பினரை அடையாளம் காண முடியும். ஒரு தரப்பு இஸ்லாமிய அடிப்படைவாத தரப்பு.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர சஹ்ரான்கள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தினார்கள் என்றால், இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி பேச முடியாது.

இரண்டாவது தரப்பு இலங்கை படையினரை பலவீனப்படுத்துவதற்காக சர்வதேச விசாரணைகளை கோரும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட பிரிவினைவாதிகள்.

மூன்றாவது தரப்பு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளரவிட்டு, அவர்களின் வாக்குகளுக்காக புலனாய்வு பிரிவினரை பலவீனப்படுத்திய தலைவர்கள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் நடப்பதை தடுத்து, பொறுப்பை நிறைவேற்ற தவறிய தலைவர்கள்.

அன்றைய பிரதமரின் தேவைக்காகவே கிழக்கு மாகாணத்தில் புலனாய்வுப் பிரிவுகள் செயலிழக்க செய்யப்பட்டதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் ஜயந்த சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply