இலங்கையை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாடாகவும் வங்குரோத்து அடைந்த நாடாகவும் அறிவித்தமை சட்டவிரோதமான செயற்பாடு என ஆளுங்கட்சியின் ஆதரவாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் சில அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதுடன், புலனாய்வுத்துறையினர் இதுதொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுவில் கருத்துக்களை முன்வைக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரலில் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக பிரகடனப்படுத்தப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி சீனாவுக்கு 70 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருந்தது. அதை செலுத்த டிசம்பர் வரை கால அவகாசம் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
2022 இல் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 7.2 பில்லியன் டொலர்கள், ஏப்ரல் மாதத்திற்குள் மூன்று பில்லியன் (3.2) டொலர்கள் செலுத்தப்பட்டிருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அவசர அவசரமாக நிதியமைச்சர் இராஜினாமா செய்தார். மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகுகினார். வெளிநாட்டில் இருந்த ஒருவர் வரவழைக்கப்பட்டு மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு நியமிக்கப்பட்டவர் நாட்டை திவாலான நாடாக அறிவித்தார். அது அவரது கடமையல்ல. ஆனால், அதனையே அவர் செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்ட தருணத்தில் எந்தெந்த நபர்கள் இருந்தார்கள் என்பதை நாடாளுமன்றக் குழு கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர்களின் குழந்தைகள் சிறப்பு இடங்களில் பலன் பெற்றுள்ளார்களா என்பதை கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலரின் விருப்பத்திற்கு அடிபணிந்து 70 மில்லியன் டொலர்களுக்கு நாட்டை திவாலானதாக அறிவிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல.
மத்திய வங்கியிலும் நிதியமைச்சிலும் உள்ளவர்களை அரசாங்கம் மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டும். புலனாய்வு துறையினர் இவர்களை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த கால போராட்டத்தின் போது மக்கள் பிரதிநிதிகளின் 100 வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன. இதற்கு முக்கிய காரணம் நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டமையே எனத் தெரிவித்துள்ளார்.
7.2 பில்லியனில் 3.2 பில்லியன் கடனை செலுத்தி நாட்டை திவாலானதாக அறிவித்தது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.