மின்சார சபை ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் மின்சார சபை ஊழியர்களுக்கு பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களுக்கான போனஸ் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி மின்சார சபையின் 35 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

எனினும் இந்த கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சார சபையிடம் பணம் இல்லாததால் போனஸ் வழங்குவதற்கு பதிலாக வாரிய ஊழியர்களின் சம்பளத்தில் ஐம்பது சதவீதத்தை வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், தொழிற்சங்க பிரதிநிதிகள், மின் வாரியத்தில் பணம் இல்லாதது, ஊழியர்களின் தவறால் அல்ல, சம்பந்தப்பட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் நடவடிக்கையே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதன் போது, மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 24ஆம் திகதி அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமைச்சர் காஞ்சன விஜேசேகர, உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், புதிய மின்சாரச் சட்டத்தின் வடிவம், விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு போன்றவற்றை மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக மின்சார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மறுசீரமைப்பு செயல்முறை, மனிதவள தணிக்கை மற்றும் பணியாளர்களை நியமிக்கும் முறை, ஓய்வு, ஊதியம் மற்றும் பணியாளர் நலன்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன், இச்செயற்பாட்டில் அபிவிருத்தி முகவர்களால் வழங்கப்படும் உதவிகள், மின்சார சபையின் மறுசீரமைப்பு பணியகத்தை நிறுவுதல் மற்றும் உத்தேச புதிய நிறுவனத்தை ஸ்தாபித்தல் போன்றவற்றையும் அமைச்சர் அவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply